கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. ஏனைய பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் என்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் முதற்கட்டமாக ஹோமாகம, ஜயவர்தனபுர மற்றும் பிலியந்தல ஆகிய கல்வி வலயங்களில் நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த கல்வி வலயங்களிலுள்ள மாணவர்கள் எந்த நிலையங்களில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தொடர்பில் அந்தந்த பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியும்.
அது மாத்திரமின்றி கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் இணையதளங்களிலும் சென்று இது தொடர்பில் பார்வையிட முடியும். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரமே ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனைய பகுதிகளில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றார்.