சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் உயிரிழப்பொன்றும் பதிவாகியுள்ளது.
புத்தளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஆனமடுவ தலஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம், இன்றைய தினம் அதிகளவிலான மழை வீழ்ச்சி யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இதன்படி அந்தப் பகுதியில் 156 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் யாழ்ப்பாண மாவட்ட பணிப்பாளர் டி.எம். சூரியராஜா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இதேவேளை கடும் மழைக் காரணமாக கம்பளை – நுவரெலியா பிரதான வீதியின் தல்பிட்டி பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதன்காரணமாக அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றுக்கும் வர்த்தக நிலையம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் இன்று பிற்பகல் திறக்கப்பட்டன.