கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதன் மூலம் நாட்டுக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது. அத்துடன் எதிர்வரும் ஒன்றரை வருடத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம் என இலங்கை மின்சார சபை பொது முகாமாயாளர் பொறியியலாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்தார்.
கெரவலப்பிட்டிய யுகதனவிய மின்உற்பத்தி நிலையத்தின் முதலீட்டு வேலைத்திட்டத்தின் நன்மை தீமை தொடர்பான கலந்துரையாடல் நேற்று தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளவே கெரவலப்பிடிய யுகதனவிய 2010இல் அமைக்கப்பட்டது. 10வருடமாகியும் அதனை எங்களால் முன்னெடுக்க முடியாமல் போனது.
கடந்த 10 வருடமாக இயற்கை சுகாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருவகையான எண்ணெய் ஊடாகவே மின் உற்பத்தி பெறப்பட்டு வந்தது. நாட்டுக்கு தேவையான மின்சாரத்தின் மூன்றில் ஒரு பங்கை நீர் மின் மூலமே பெறப்படுகின்றது. கெரவலப்பிடியவில் இருந்து 5 வீதம் வரையான மின்சாரமே பெறப்படுகின்றது.
அத்துடன் அரசாங்கத்தின் இலக்காக இருப்பது 2030 வருடமாகும்போது நாட்டுக்கு தேவையான மின் உற்பத்தியில் 70வீதம் மீள் புத்தாக்க சக்தி ஊடாக பெறவேண்டும் என்பதாகும். அதன் பிரகாரம் திரவ இயற்கை வாயு மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கெரவலப்பிடிய யுகதனவிய மின்உற்பத்தி நிலையத்தின் 40வீத பங்கை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றாேம். என்றாலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. இது இரகசியமாக மேற்கொள்ளப்படுவதொன்று அல்ல. இதற்கு அமைச்சரவையினால் 4 தடவைகள் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது.
அத்துடன் 250டொலர் மில்லியனுக்கு 40வீத பங்கு வழங்கப்படுகின்றது. இதனால் நாட்டுக்கு நன்மையாகும். அரசாங்கமும் குறித்த அமெரிக்க நிறுவனமும் இணைந்தே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.
5 வருடத்துக்கே இந்த ஒப்பந்தம் செய்யப்படுகின்றது. நீண்டகால ஒப்பந்தம் மூலம் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையிலேயே செய்திருக்கின்றது.
குறிப்பாக எதிர்காலத்தில் பெற்றோல் விலை அதிகரித்தாலும் ஒப்பந்தத்தின் பிரகாரம் எமக்கு விநியோகிக்கும் விலையில் மாற்றம் ஏற்படாது.
மேலும் கெரவலப்பிடியவில் இருக்கும் யுகதனவிய மற்றும் சுபதனவிய ஆகிய இரண்டு மின் உற்பத்தி நிலையங்களின் மூலம் மொத்தமாக நாட்டுக்கு 110 பில்லியன் ரூபா லாபம் கிடைக்கின்றது. அதன் நன்மை இலங்கை மின்சாரசபை ஊடாக மக்களுக்கு கிடைக்கும். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 2023இல் ஆரம்பிக்க இருக்கின்றது.
அதனால் கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தின் 40வீத பங்கை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக நாட்டுக்கு நன்மையாகவே அமையும் என்றார்.