Home விளையாட்டு 21 வருடங்களாக நீளும் வெற்றிக் கிண்ண தாகத்தைத் தீர்க்க இலங்கை முயற்சி – சிஷெல்ஸுடான பிரதமர்...

21 வருடங்களாக நீளும் வெற்றிக் கிண்ண தாகத்தைத் தீர்க்க இலங்கை முயற்சி – சிஷெல்ஸுடான பிரதமர் கிண்ண இறுதி ஆட்டம் இன்று

103
0

சிஷெல்ஸ் அணிக்கு எதிராக இன்று இரவு நடைபெறவுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி கால்பந்தாட்டத்தில் புதிய வரலாறு படைக்க சுஜான் பெரேரா தலைமையிலான இலங்கை அணி கங்கணம் பூண்டுள்ளளது.

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் 21 வருடங்கள் நீடிக்கும் வெற்றிக் கிண்ணத் தாகத்தை இன்றைய போட்டி மூலம் இலங்கை தீர்த்துக்கொள்ளும் என நம்பப்படுகின்றது.

சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் இலங்கை அணி கடைசியாக 2000ஆம் ஆண்டு மாலைதீவுகளில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சம்பியனாகியிருந்தது. அதன் பின்னர் இறுதிப் போட்டி ஒன்றில் இலங்கை சிரேஷ்ட அணி பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

நடப்பு கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை அணி மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற பங்களாதேஷுடான தீர்மானமிக்க போட்டியில் உபாதையீடு நேர பெனல்டி மூலம் இலங்கை 2 – 1 என்ற கொல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் மாலைதீவுகளிடம் 0 – 4 என்ற கோல்கள் கணக்கில் பின்னிலையில் இருந்து எதிர்நீச்சல் போட்டு வசீம் ராசீக்கின் 4 கோல்களின் உதவியுடன் போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இரண்டாவது போட்டியில் சிஷெல்ஸிடம் 0 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

அந்தத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை சாரபாக அணித் தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேராவும் முன்கள வீரர் வசீம் ராசீக்கும் பிரதான பங்காற்றினார்கள் என்று கூறினால் தவறாகாது.

இலங்கை அணி வீளையாடிய 3 போட்டிகளிலும் எதிரணிகளின் பல கோல் போடும் வாய்ப்புகளை சுஜான் பெரேரா தடுத்ததுடன் இலங்கை சார்பாக 6 கோல்களையும் வசீம் ராசீக் போட்டமை விசேட அம்சமாகும்.

இவர்களை விட டக்சன் பியூஸ்லஸ். சரித் ரத்நாயக்க. ஹர்ஷா பெரேரா, சலன சமீர, டிலொன் டி சில்வா, கவிந்து இஷான் ஆகியோரும் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும் இன்றைய இறுதிப் போட்டியில் 3 பிரதான வீரர்கள் இடம்பெறாதது இலங்கை அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகின்றது.

டிலொன் டி சில்வா, கவிந்து இஷான் ஆகிய இருவரும் உபாதையிலிருந்து மீளாததால் இன்றயை போட்டியில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பங்களாதேஷுடனான போட்டியில் சிவப்பு அட்டைக்கு இலக்கான டக்சன் பியூஸ்லஸ் ஒரு போட்டித் தடையை எதிர்கொண்டுள்ளார்.

இவர்கள் மூவரின் இடங்களை பெரும்பாலும் மொஹம்மத் ஆக்கிப், சமோத் டில்ஷான், ஜூட் சுபன் ஆகியோர் நிரப்புவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று பிரதான வீரர்களை ஒரே நேரத்தில் தற்காலிகமாக இழப்பதென்பது இலங்கை அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த சுஜான் பெரேரா, எனினும் இன்றைய போட்டியில் சம்பியனாகும் குறிக்கோளுடன் கடைசிவரை போராட்டக் குணத்துடன் விளையாடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மறுபுறத்தில் பஙகளாதேஷுடனான போட்டியை 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட சிஷெல்ஸ்,  இலங்கையை 1 – 0 எனவும் மாலைதீவுகள்  2 – 1 எனவும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு தொல்வி அடையாத அணியாக முன்னேறியது.

இந்த சுற்றுப் போட்டியில் இரண்டாவது தடவையாக இலங்கை அணியை சிஷெல்ஸ் எதிர்த்தாடவுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியின்போது பிரதமரின் பாரியார் ஷிரன்தி ராஜபக்ஷ பிரதம அதிதியாகவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜியான்னி இன்பன்டினோ விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்குவார்கள்.

இது இவ்வாறிருக்க, முன்னொருபோதும் இல்லாதவாறு இலங்கை கால்பந்தாட்டம் கடந்த சில மாதங்களில் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளதாகத் தெரிவித்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை இலங்கை வென்றெடுத்தால் முழு அணிக்கும் போனஸாக பணப்பரிசு வழங்கப்படும் என்றார்.

அணிகள்

இலங்கை: சுஜான் பெரேரா (தலைவர் – கோல் காப்பாளர்), ஹர்ஷ பெர்னாண்டோ, சரித்த ரத்நாயக்க, ஜூட் சுபன், சமோத் டில்ஷான், அசிக்கூர் ரஹுமான், கலன சமீர, வசீம் ராசீக், மார்வின் ஹெமில்டன், மொஹம்மத் ஆக்கிப், சசங்க டில்ஹார, அஹமத் சஷ்னி, மொஹம்மத் பஸால், டெனியல் மெக்ரா, டிலிப் பீரிஸ், மொஹம்மத் பாஸித், மொஹம்மத் ரிப்னாஸ், பிரபாத், மொஹம்மத் அமான், கவீஷ்.

சிஷெல்ஸ்: ஸ்டீவ் மாரி (தலைவர்), டொன் ப்ரன்ச்செட், ஜியன் ஈவ்ஸ் ஏர்னெஸ்டா, ஜோசிப் ரவிஜினியா, ஸ்டெபான் மோத், வொரன் மெலீ, கெனர் நூரிஸ், மார்க் மெதியொட், அல்வின் மைக்கல், ராஷித் லெப்ரோஸ், லீரோய், ஜியன் போல், ஸ்டன் ஈவ்ஸ், ருண்டோல்வ், எலிஜா, அன்தனி, ரெம்பேர்ட், ஓஹிஸ்லெய்ன், டெனி, இம்மானுவேல், மார்க், ரொபர்ட்சன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here