2021 ஆம் ஆண்டுக்கான ‘பெலன் டி ஓர்’ விருதை ஆர்ஜன்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றார்.
ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு ‘பெலன் டி ஓர்’ (Ballon d’Or) விருது வழங்கப்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக பெலன் டி ஓர் விருது 2020 ஆம் ஆண்டு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ‘பெலன் டி ஓர்’ விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
பாரிஸில் நேற்று நடந்த விழாவில் ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் தலைவரும் உலகின் முன்னணி கால்பந்து வீரருமான லியோனல் மெஸ்ஸி இந்த விருதை 7 ஆவது முறையாகவும் வென்றார்.
இந்த விருதை, இறுதியாக 2019 ஆம் ஆண்டில் மெஸ்ஸி வென்றிருந்தார். முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு ‘பெலன் டி ஓர்’ விருதை வென்ற லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக வென்றார்.
அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு 5 ஆவது முறையாக அவர் ‘பெலன் டி ஓர்’ விருதை வென்றார்.
விருது வென்ற பின் லியோனல் மெஸ்ஸி கூறியதாவது, “நான் எப்போது ஓய்வு பெறப் போகிறேன் என்று மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கத் தொடங்கினர். ஆனால் இப்போது நான் இங்கே இந்த விருதைப் பெற்று நிற்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என எனக்கு தெரியவில்லை.
ஆர்ஜென்டினா அணிக்குக் கோபா அமெரிக்கா கிண்ணத்தை பெற்று தந்ததன் மூலம் என்னுடைய கனவு நனவானது. அதை எனது சக வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
இதேவேளை, மகளிருக்கான ‘பெலன் டி ஓர்’ விருதை ஸ்பெயின் வீராங்கனை புட்டெல்லாஸ் மூன்றாவது முறையாக வென்றார்.