யுக்ரைன் மற்றும் ரஷ்ய தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று துருக்கியில் இன்று இடம்பெறவுள்ளது.
ஸ்தான்புல்லில் இந்த சந்திப்பு இன்று ஆரம்பமாகவுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளவர்கள் துருக்கி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைக்காக யுக்ரைன் பிரதிநிதிகள் துருக்கியை சென்றடைந்துள்ளனர்.
போரை நிறுத்துவதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம் என யுக்ரைன் பிரநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இருவாரங்களுக்கு பிறகு இருநாட்டுப் பிரதிநிதிகளும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் பிரான்ஸ் 27 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்களை யுக்ரைனுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் சுமார் 50 டன் மருத்துவ மற்றும் அவசர உபகரங்களும் யுக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என ரஷ்யா அறிவித்துள்ளது.
எனினும், ரஷ்ய எரிவாயு ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் ரூபிள்களில் கட்டணத்தை செலுத்த மறுத்தால் அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என கிரெம்ளினின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
‘நட்பற்ற’ நாடுகள் தங்களது எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான கட்டணத்தை யூரோ அல்லது ரூபிள்களில் செலுத்த வேண்டும் என ரஷ்யா விடுத்த கோரிக்கையை ஜி-7 நாடுகள் புறக்கணித்தமையை அடுத்து இந்த தகவல் வெளியிட்டுள்ளது.