ஆசிய கிண்ண (டி20) கிரிக்கெட் சுற்றுப் போட்டியை இந்த வருடம் நடத்த முடியுமா? இல்லையா? என்பதை எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதிக்கு முன்னர் தீர்மானிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலையினால் தற்போது இலங்கை முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இங்கு நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆறு நாடுகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப் போட்டியை முன்னின்று நடத்துவதற்கான உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
உயர்ந்துகொண்டுபோகும் பணவீக்கம், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மருந்துவகைகள் மற்றும் எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு, வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவு போன்ற நெருகடிகளில் இலங்கை சிக்கி தவிக்கிறது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் அரச எதர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்த பல தினங்களாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகின்றன.
இந் நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடன் ஆசிய கிரிக்கெட் பேரவை பிரதிநிதிகள் தொடர்புகொண்டு நிலைமைகள் குறித்து கலந்துரையாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவது இலங்கைக்கு மிகவும் சிரமமாக அமையும்.
எனினும் இப் போட்டியை நடத்த முடியும் என்பதில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன பிரதிநிதிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
போட்டி நடைபெறுவதற்கு சில மாதங்கள் இருக்கின்றபோதிலும் இலங்கைக்கு ஜூலை 27வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது’ என ஆசிய கிரிக்கெட் பேரவை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
இதேவேளை, ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை தங்களால் நடத்தக்கூடியதாக இருக்கும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இந்த வருட இறுதியில் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பதால் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியும் இருபது 20 கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடைசியாக 2018இல் நடத்தப்பட்ட 50 ஆசிய கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் இந்தியா சம்பியனாகியிருந்ததுடன் பங்களாதேஷ் இரண்டாம் இடத்தைப் பெற்றது.