அணிக்கு 7 பேர் கொண்ட இலங்கை குழாமை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற ரக்பி போட்டித் தொடரில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித்த ராஜபக்ச பாதுகாப்பு காரணமாக பங்கேற்பதை தவிர்த்திருந்தார்.
பொது நலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழா ஆகிய தொடர்களில் பங்கேற்கவுள்ள இலங்கை ரக்பி குழாமை தெரிவு செய்வதற்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட ரக்பி தொடர் கடந்த ஞாயிறன்று கொழும்பு சீ.ஆர். மைதானத்தில் நடைபெற்றிருந்தது.
இலங்கையின் 8 முன்னணி ரக்பி அணிகளைத் தவிரவும், சீ. எச். & எப்.சீ அணியின் முன்னணி வீரர்களைக் கொண்ட இலங்கை ரக்பி ஆரம்ப குழாத்தில் 56 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களுக்கிடையில் 4 அணிகள் கொண்ட இப்போட்டித் தொடரில் கடற்படை அணி சார்பாக யோஷித்த ராஜபக்ச பெயரிடப்பட்டிருந்தார்.
இருந்தபோதிலும், மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தபோதிலும், போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் எந்நேர வேண்டுமானாலும் மைதானத்திற்குள் ஊடுருவலாம் என்ற அச்சம் காரணமாக யோஷித்த ராஜபக்ச இப்போட்டித் தொடரில் பங்கேற்பதை தவிர்த்திருந்தார்.