நாட்டின் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 19ஆவது நாளாகவும் தொடர்கிறது.
கடந்த தினங்களில் காலி முகத்திடலில் பாரிய அளவான மக்கள் இணைந்திருந்தனர்.
நேற்றிரவு குறித்த பகுதியில் கூடியிருந்த மக்கள் வெவ்வேறு செயற்பாடுகளின் ஊடாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று, கண்டியிலிருந்து கொழும்பு வரை ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கமைய குறித்த பேரணி மாவனெல்லை, கலிகமுவ, யக்கல மற்றும் பேலியகொட ஊடாக கொழும்பை வந்தடையவுள்ளது.
இதேவேளை தற்போதைய ஜனாதிபதி அல்லது பிரதமர் பங்கேற்கும் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.