இன்று (19) பிற்பகல் ஆரம்பமான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை நோக்கி காவல்துறையினர் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறையினரின் வீதித் தடையை அகற்ற முற்பட்டபோது, கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு பிரவேசிக்கும் இலங்கை வங்கி வீதியில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று பிற்பகல் கொழும்பு தாமரை தடாகத்துக்கு அருகாமையில் ஆரம்பமான இந்த நடைபயண பேரணி மருதானை ஊடாக, காலி முகத்திடல் போராட்டக் களத்துக்கு பிரவேசிக்கும் நோக்கில் மேற்படி இடத்தை வந்தடைந்தது.
இந்நிலையில், முன்னதாக காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பேரணியை தடுக்க உத்தரவு வழங்கியது.
இந்த உத்தரவின் ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, செத்தம் வீதி மற்றும் ஜனாதிபதி வீதிக்குள் நுழைவதற்கும், பொது சொத்துக்களை சேதப்படுத்துவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.
ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமருக்கு எதிர்ப்பு இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களது பேரணி காரணமாக கொழும்பு பிரதேசத்தின் சில வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.