முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதகமான வகையில் மின்சார சட்டம் திருத்தப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து, தங்களது கோரிக்கை தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவுற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், தாம் முன்னர் திட்டமிட்ட வகையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
1996ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மின்சக்தி சட்டத்தை திருத்தச் செய்யும் சட்டமூலம் நாளை நிச்சயம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.