பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ இன்னும் தோல்வியை நேரடியாக ஒப்புக்கொள்ளவில்லை. எனினும் அவர் அதிகார கைமாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் 2 ஆவது சுற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
‘பிரேஸிலின் டொனால்ட் ட்ரம்ப்’ என வர்ணிக்கப்படும் ஜெய்ர் போல்சனரோ, இத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்பது தொடர்பில் ஏற்கெனவே சந்தேகம் வெளியிட்டு வந்தார். இதனால் அவர் தேர்தல் பெறுபேற்றை ஏற்றுக்கொள்ளாமல் விடக்கூடும் என அஞ்சப்பட்டது.
நேற்று முன்தினம் வெளியான பெறுபேறுகளின்படி, முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா 50.1 சதவீத வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றியீட்டினார். தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவுக்கு 49.1 சதவீத வாக்குகளே கிடைத்தன.
அதன்பின் 2 நாட்களாக ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ, நேரடியாக தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால், அவர் புதிய அரசாங்கத்திடம் அதிகாரத்தை கையளிப்பதற்கு ஜெய்ர் போல்சனரோ ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மாளிகையிலிருந்து 2 நிமிடங்கள் உரையாற்றிய அவர், தோல்வியை ஒப்புக்கொள்ளவோ அல்லது தனது வெற்றியீட்டிய வேட்பாளரான லூலா டி சில்வாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவோ இல்லை.
எனினும், ‘இக்குடியரசின் ஜனாதிபதி மற்றும் பிரஜை என்ற வகையில், அரசியலமைப்புக்கு இசைந்து செயற்படுவேன்’ என ஜெய்ர் போல்சனரோ கூறினார்.
அதன்பின் தனது அதிகாரிகளின் பிரதானி சிரோ நோகுய்ராவிடம் ஒலிவாங்கியை அவர் கொடுத்தார்.
அப்போது ‘ஆட்சி மாற்றதுக்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு போல்சனரோ ‘அதிகாரம்’ அளித்துள்ளார் என சிரோ நோகுய்ரா கூறினார்.
2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் தோல்வியின் பின்னர் அவரின் ஆதரவாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெய்ர் போல்சனரோவின் ஆதரவாளர்கள் குறிப்பாக லொறி சாரதிகள், நேற்று வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ர் போல்சனரோ, ‘அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எப்போதும் வரவேற்கப்படும்’ என்றார்.
பிரேஸிலின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 77 வயதான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி 3 ஆவது தடவையாக ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.