4 ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு 3 வெள்ளிப் பதக்கங்களும் 2 வெண்கலப் பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு சிறந்த வரவேற்பு !

குவைத், கய்ஃபான் மெய்வல்லுநர் விளையாட்டரங்கில் கடந்த 16 ஆம் திகதி நிறைவுபெற்ற 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான 4 ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு 3 வெள்ளிப் பதக்கங்களும் 2 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 48.56 செக்கன்களில் நிறைவு செய்த பிரவீன் சாலமுத்து ஜயதிலக்க (தேர்ஸ்டன் கல்லூரி) வெள்ளிப் பதக்கத்தையும் 48.70 செக்கன்களில் நிறைவுசெய்த அவிஷ்க தேமிந்த ராஜபக்ஷ  (குருநாகல், சேர் ஜோன் கொத்தலாவல மகா வித்தியாலயம்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

ஆண்களுக்கான உயரம் பாய்தலில் எஸ். தெனெத் அனுஹாஸ் (தனமல்வில, போதகம மகா வித்தியாலயம்) 2.01 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் ஜீ. லெசந்து அர்த்தவிந்து (கொழும்பு, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி) 1.97 மீற்றர் உயரம் தாவி வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியை 2 நிமிடங்கள், 15.42 செக்கன்களில் ஓடி முடித்த கசுனி நிர்மலி விக்ரமசிங்க (கம்பளை, விக்ரமபாகு தேசிய பாடசாலை) வெள்ளிப் பதக்கதை வென்றார்.

இவர்களைவிட ஆர். கரீம் (பாணந்துறை லைசியம் சர்வதேச பாடசாலை, நீளம் பாய்தல்), கே. சித்துலி சாதித்யா (நுகேகொடை சமுத்ராதேசி மகளிர் வித்தியாலயம் உயரம் பாய்தல்), மதுஷானி ஹேரத் (பிபிலே, நன்னம்புராவ மகா வித்தியாலயம் நீளம் பாய்தல்) ஆகியோரும் போட்டிகளில் பங்குபற்றி சிறந்த பெறுபேறுகளைப் பதிவுசெய்த போதிலும் பதக்கங்களை நூலிழையில் தவறவிட்டனர்.

பாலித்த ஜயதிலக்க (அணி முகாமையாளர்),  எம்.ஜீ.கே. குமார (பயிற்றுநர்)   இமல்கா ரணவீர (பெண்கள் காப்பாளர்)    ஆகியோர் அதிகாரிகளாக குவைத் சென்றிருந்தனர்.

அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை நாடு திரும்பியதுடன் அவர்களை ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் (இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம்) தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, உதவித் தலைவர் சந்தன ஏக்கநாயக்க, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் திலக் அப்பொன்சு, அபிவிருத்தித்துறை அதிகாரி காமினி கப்பிலதேவ கொஸ்தா, வீர, வீராங்கனைகளின் பெற்றோர், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *