இந்தியாவின் Maiden Pharmaceuticals நிறுவனத்தினால் தயாரித்து விநியோகிக்கப்படும் இருமல் மற்றும் காய்ச்சலுக்கான நான்கு வகை திரவ ஔடதங்கள் (சிரப்) குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்க நாடான கெம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்தமைக்கு குறித்த ஔடதங்களை பருகியமையே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தமையை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், குறித்த ஔடதத்தினை பயன்படுத்தியமையால் 66 சிறுவர்களின் சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கைகள் வாயிலாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிலையம் ஒன்று மெய்டன் பாமசெடிக்கல்ஸ் (Maiden Pharmaceuticals) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் காய்ச்சலுக்கான ஔடதங்களை பரிசோதித்து வருவதோடு, நிறுவனத்துடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்திய மருந்தக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ள போதிலும் முழுமையான பதில் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை Maiden Pharmaceuticals நிறுவனம் மறுத்துள்ளது.

அத்துடன், Maiden Pharmaceuticals நிறுவனம் தனது உற்பத்திகள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து, விசாரணைகள் நிறைவடையும் வரை விநியோகிப்பதை நிறுத்துமாறும், விநியோகிக்கப்பட்டுள்ள மருந்துகளை மீளப்பெற்றுக்கொள்ளுமாறும் தனது முகவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கெம்பியாவில் Maiden Pharmaceuticals நிறுவனத்தின் அனைத்து உற்பத்திகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமையினால் தற்போது மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் கம்பிய சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *