75 ஆவது சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு

75 ஆவது சுதந்திர தினம் என்பது எதிர்காலத்திற்கான முதலீடு

சுதந்திர தினத்துக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஜனாதிபதி அது எதிர்காலத்துக்கான முதலீடு என இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் நூற்றாண்டு சுதந்திர விழாவை அடைவதற்குள்ள எதிர்வரும் 25 வருடங்களில் நாட்டுக்கு அவசியமான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பல புதிய நிறுவனங்களையும் சட்டங்களையும் அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தற்போது எமக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டி மட்டுமே உள்ளது. அது தொடர்பான பேச்சுக்களை நாம் முன்னெடுத்து வரும் நிலையில் அப்பேச்சு வார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக நான் இந்த சபைக்கு அறிவிக்க முடியும்.

சுதந்திர தினத்துக்காக நிதியை விரயம் செய்வதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் நாம் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதுபோலவே அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் 10 பில்லியன் வரை எமக்கு ஒதுக்க நேரிடும். இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை காணப்பட்டாலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். இந்த 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நமது அரசியல் முறையை நாம் இப்போது மாற்றுவோம் என்று எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொள்கிறேன். மக்களை துன்பத்திலிருந்து விடுவித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். இந்த வரையறுக்கப்பட்ட அளவிலான வளங்களைக் கொண்டு இதுபோன்ற முன்னேற்றத்தை எங்களால் அடைய முடியுமென்றால், நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *