IMF இன் நிபந்தனையை பகிரங்கப்படுத்திய ஜனாதிபதி

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் விசேட உரையை நிகழ்த்திய அவர், இனப்பிரச்சினை தீர்வு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல், காணாமல் போனோர் விடயம் என்பன தொடர்பாக தீர்வு காணப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிலர் அண்மையில் விடுவிக்கப்பட்டார்கள், எதிர்காலத்திலும் எஞ்சியவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக அடுத்த வாரத்தில் தாம் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, எகிப்தில் இடம்பெற்ற கொப் 27 ஆவது காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தொடர்பாகவும், ஜனாதிபதி கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகளிடமிருந்து வளர்முக நாடுகள் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை, இது அந்த மாநாட்டில் பின்னடைவாகவே கருதப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த மாநாட்டில் காலநிலை தொடர்பான எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உணவு பற்றாக்குறையை பொருத்த வரையில் ஆபிரிக்க நாடுகளே அதிகமாக அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளில் பாதிக்கப்படும் அபாயத்தை கொண்டுள்ளன.

இதனை மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் எச்சரிக்கை செய்தியாக அறிவித்ததாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.

இதற்கிடையில், எகிப்து மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக தாம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரை சந்தித்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் டிசெம்பர் அளவில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி இ;ந்த கருத்தை வெளியிடும் போது குறுக்கீட்டு கேள்வியை எழுப்பிய, எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியயெல்ல, எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கை குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, ஏனைய கடன்வழங்குனர்களின் இணக்கப்பாடு எட்டப்படும் வரை இந்த விடயத்தை வெளிப்படுத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளதாக குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன், இணங்கப்பட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஏனைய கடன் வழங்குனர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

இதில் இணக்கப்பாடு காணப்பட்டதுடன் அதனை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரணில் விக்ரம சிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாடுகளின் படி மறைமுக வரிகளை விதிப்பதன் மூலம் பாரத்தை சுமத்துவதா, நேரடி வரிகளை விதிப்பதா, அல்லது அரச செலவீனங்களை குறைப்பதா, என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, கடன் மறுசீரமைப்புக்கு கடன்வழங்குநர்களில் ஏதாவது ஒரு தரப்பு இணக்கம் வெளியிடாவிட்டால் அது குறித்து மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

கடன்களை இரத்துச் செய்வதா அல்லது கடன் செலுத்தும் தவணைகளை நீடிப்பதா என்பது குறித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டவேண்டியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *